பள்ளிக் கல்வித் துறை-மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள், தலைமைச் செயலகம்,
சென்னை-6.

அன்புடையீர்! வணக்கம்,
 
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவிகள் மாணவர்களுக்கு குறு வட்ட,வருவாய் மாவட்டம், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்  மற்றும் தேசிய அளவிலான  விளையாட்டுப் போட்டிகள் (குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள்) நடத்துவதற்கு  மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்கள் விளையாட்டுகளை துறையை மேம்படுத்தவும் , ஊக்கப்படுத்தவும் ரூபாய் 12.50/= கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளிக் கல்வித் துறை விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பும் பணம் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்டு  அவர்கள் இந்த பணத்தை மாவட்டங்களில் குறு வட்டம் ,வருவாய் மாவட்டம், மாநில போட்டிகள் மற்றும் மற்றும் தேசிய அளவிலான  விளையாட்டுப் போட்டிகளுக்கு செலவினங்கள் மேற்கொள்ளும் பொருட்டு  நிதி வழங்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களில் குறுவட்ட போட்டிகள் நடத்தும் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மூலம் காசோலை மூலம் செலவினங்கள் மேற்கொள்ள நிதி வழங்கப்படுகிறது.

அடுத்து வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுபோட்டிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அவர்கள் நேரடியாக பணத்தை பெற்று போட்டிகளை  நடத்துகிறார்கள். வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூலமாக நன்கொடை( Sponsor )பெற்று தனக்கு வேண்டிய உடற்கல்வி ஆசிரியர்கள் மூலமாக குழு அமைக்காமல் போட்டிகளை நடப்பதாக அறிகின்றோம், சில மாவட்டங்களில் குழு அமைக்கப்பட்டாலும் அந்த குழுவை போட்டிகளை நடத்துவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் நிதி சார்ந்த செயல்பாடுகளில் குழுவை பங்கெடுக்க அனுமதிப்பதே இல்லை.இதில் அரசு வழங்கும் பணத்தை முறையாக செலவு செய்வதில்லை .  சில மாவட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் பங்கு உண்டு.


அடுத்து மாநில அளவில் நடக்கும் தடகளப் போட்டிகள் பழைய விளையாட்டு போட்டிகள் மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகள் (RDG/BDG &RD/BD)  அரசு கொடுக்கும் நிதியினை முறையாகவும்,  முழுமையாகவும் பயன்படுத்தப்படுவதில்லை  என்ற புகார் எழுந்து வருகிறது. மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ/ மாணவிகளுக்கு  சுகாதாரமான தங்குமிடம், தரமான உணவு ,  போக்குவரத்து வசதிகள் மற்றும் தரமான சீருடைகள்   வழங்குவதில்லை. மேலும் மாநில போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ /மாணவியர்களுக்கு போக்குவரத்து படி (TA) முறையாகவும் போட்டி நடைபெறும் இடத்தில் வழங்கப்படுவது இல்லை. இதனால் பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் மாநிலப் போட்டிகளுக்கு  மாணவர்களை அழைத்துச் செல்ல  பெரும் சிரமம் ஏற்படுகிறது. பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் மாணவர்களை மாநில போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களே தங்களது சொந்த நிதியிலிருந்து அழைத்துச் செல்கிறார்கள். போட்டி நடத்துவதில் ஏற்படும் சில தவறுகளால் போட்டியில் பங்கேற்கும்  மாணவர்கள் திறமை இருந்தும்  வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

முழுகல்வித் தகுதியும் முறையான பயிற்சியும் பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர்களை கொண்டு  மாநில அளவிலான  போட்டிகளை நடத்தப்பட வேண்டும்.

கல்வி ஆண்டிற்கு ஒரு முறை உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்களுக்கு விளையாட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள்/விதிமுறைகள் அறிந்து கொள்ள ஏதுவாக புத்தாக்க பயிற்சிகள் நடத்தி முழுமையாக மாநில போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குனர்களை மட்டுமே கொண்டு நடத்தப்பட வேண்டும்.

அரசு வழங்கும் பணத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சில பேர் வீரர்களுக்கான Sports costume குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வாங்குவதாக கணக்கு காட்டப் படுகிறது. மேலும் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு  உணவு நல்ல தரமாக வழங்குவதில்லை. மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்கள்  அரசு வழங்கும் நிதி விட குறைவான விலையில் தரம் இல்லாத பதக்கங்கள் வழங்கப்படுவதாக  மாணவர்கள், அணி மேலாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் எழுகிறது.

மேலும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் நடுவர்களாக  நியமிக்கப்படும் உடற்கல்வி ஆசிரியர்கள்/ மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு சுகாதாரமான தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படுவதில்லை.

இனிவரும் காலங்களில் நடக்க இருக்கும் அனைத்து போட்டிகளையும் மேற்கூறிய பிரச்சினைகளை சரி செய்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து எந்தவித புகாருக்கும் இடம் அளிக்கா வண்ணம் செயல்பட்டு அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எங்களது சங்கத்தின் சார்பாக கனிவுடன் கேட்டுக் கொள்கின்றோம் 

எஸ்.சங்கரப்பெருமாள்
மாநில தலைவர்,

மா.மு சதீஷ்,
மாநில பொதுச் செயலாளர்,

N.சுரேஷ் குமார்,
மாநில பொருளாளர்,

S.செல்வகுமார்,
மாநில செயல் தலைவர்.

மற்றும் மாநில நிர்வாகிகள்.

Post a Comment

Previous Post Next Post